புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
அந்த வகையில், டுபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கடல்வழியாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இந்தக் கொலை உட்பட மேலும் 6 கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நபர் இடைநடுவே இராணுவத்திலிருந்து விலகி தலைமறைவாகியுள்ள நபர் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பணத்தில் துப்பாக்கிதாரிக்கு 200,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிதாரியும், துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவிய பெண்ணும் கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பின்னர் இருவரும் மருதானை பகுதிக்குச் சென்று, அங்கிருந்து முச்சக்கரவண்டி ஊடாக நீர்கொழும்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்து துப்பாக்கிதாரி மாத்திரம் புத்தளத்திற்கு பயணித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (tamilmirror)