செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்சிஜன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கிறதா என்ற ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அங்கு கடற்கரை இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வுகளின் தரவுகள் படி, 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில், கடற்கரை இருந்திருக்கக்கூடும் என்றும், கிட்டத்தட்ட பாதி கிரகத்தை அந்த கடல் மூடியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. முதன்முதலில், 1970களில் நடத்தப்பட்ட ஆய்வில், நாசாவின் மரைனர் 9 ஆர்பிட்டரிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர் செதுக்கப்பட்ட மேற்பரப்புகளை வெளிப்படுத்தின. சீனாவின் ஜூராங் ரோவர் செவ்வாய்க் கிரகத்திலிருந்து அனுப்பிய தகவலின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரையை PNAS ஆய்வு இதழில் சீனா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். உதாரணமாக, செவ்வாய் கிரக விண்கற்கள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தண்ணீருக்கான ஆதாரங்களைப் பதிவு செய்கின்றன. சமீபத்திய ஆய்வில், கடந்த சில ஆண்டுகளாக உருவான தாக்கப் பள்ளங்கள் இன்று மேற்பரப்பிற்கு அடியில் பனி இருப்பதைக் காட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது தண்ணீர் எப்போது தோன்றியது, எவ்வளவு இருந்தது, எவ்வளவு காலம் நீடித்தது, தண்ணீரின் தன்மை என்ன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று PNASஇல் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்சோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்ஹுய் லி தலைமையிலான சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. மேலும், இது சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தின் செவ்வாய் கிரக ரோவர் ஜுரோங்கின் பணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.