நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சில வாகன விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) இந்த விபத்துகள் டெல்ஃப்ட், கந்தானை, அவிசாவளை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
நெடுந்தீவு – சராபிட்டி வீதியில் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு அருகே டிராக்டர் ஒன்று வீதியோரத்தில் இருந்த தடுப்பு தூணில் மோதி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், 13ஆவது பிரிவு, கிழக்கு நெடுந்தீவு பகுதியில் வசித்த 37 வயதுடைய நபராவார்.
இதற்கிடையில், கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரலந்த பகுதியில் ராகமவிலிருந்து கந்தானை நோக்கி சென்ற லொறி ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த இரு பெண் பாதசாரிகள் மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், கொடகவெல, ரக்வான பகுதியில் வசித்த 62 வயதுடைய பெண்ணாவார்.
இதற்கிடையில், கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் புவக்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், அகரவிட்ட, கொஸ்கம பகுதியில் வசித்த 39 வயதுடைய நபராவார்.
இதற்கிடையில், கண்டி – குருணாகல் வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் மோட்டார் சைக்கிள் ஒன்று பல வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றது.
கண்டி பகுதியில் வசித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.