சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (27) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வர்த்தகர் பஹ்ரைனிலிருந்து இன்றைய தினம் காலை 10.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 20,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 100 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வர்த்தகர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.