தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் கண்களில் பெவிகாலை ஊற்றி, தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா ராணி (26). இந்த தம்பதிக்கு 8, 5 மற்றும் 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முரளி வேலை காரணமாக அடிக்கடி வீட்டிற்கு வராததால், கணவன் – மனைவி இடையே சண்டை வந்துள்ளது. மேலும், மனைவி விமலாவுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, முரளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான், சம்பவத்தன்று இரவு மனைவி விமலா, செல்போனில் நீண்ட நேரமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த முரளி யாருடன் பேசுகிறாய் என கேட்டு சண்டை போட்டுள்ளார். இதில், இருவருக்கும் பயங்கர கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், முரளி வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார்.
ஆனால், கடும் கோபத்தில் இருந்த மனைவி விமலா, முரளி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை சமயத்தில் அவரது கண்களில் பெவிகாலை ஊற்றியுள்ளார். இதனால், கண்களை திறக்க முடியாமல் முரளி கதறி அலறியுள்ளார். பின்னர், முரளியை தீவைத்து எரித்துள்ளார். இதையடுத்து, அந்த ரூமை பூட்டி விட்டு எதுவும் தெரியாதது போல், வெளியில் வந்து சாதாரணமாக இருந்துள்ளார். ஆனால், முரளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது மனைவியின் நடவடிக்கை குறித்தும், தன் மீது தீவைத்தது குறித்து போலீசிடம் முரளி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி விமலா ராணியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.