இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மதிய உணவு நேரத்தில் நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்றும் நாலக ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மேலதிக நேரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையை முன்னிறுத்தி , கிழக்கு மாகாணத்தில் மட்டும் இன்று சுகயீன விடுமுறையை பதிவு செய்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிபர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாதது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அதிபர் தர அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்காலத்தில் அனைத்து தர அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் நிமல் முதுங்கொடுவ தெரிவித்தார்.