உலகில் பிறப்பு விகிதம் அதிகளவில் குறைந்து வரும் நாடுகளில் ஒன்றாக சீனாவும் உள்ளது. சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வரும் நாடுகளான ஜப்பான், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளுடன் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருந்தது, இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான மக்கள்தொகை அதிகரித்து வருவதும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து இருக்கிறது. இந்த நிலையில் திருமணம் செய்யாத, விவாகரத்து பெற்றவர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது.
சீனாவின் லினி நகரை தளமாகக் கொண்டு ஷுண்டியன் கெமிக்கல் என்ற குழுமம் ஒன்று இயங்கி வருகிறது. 2001இல் நிறுவப்பட்ட இந்தக் குழுமம், அங்குள்ள சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இங்கு, 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிறுவனம், சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாத, விவாகரத்து பெற்ற ஊழியர்கள் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய வேண்டும். அவர்களை நிறுவனம் ஆய்வு செய்யும். ஒருவேளை ஜூனில் செய்யாவிட்டால், செப்டம்பர் மாத இறுதிக்குள் திருமணம் செய்ய வேண்டும்; அப்படி இல்லையெனில், பணி நீக்கம் செய்யப்படுவர் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு 28 முதல் 58 வயது வரை உள்ள ஊழியர்கள் குறிவைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே இந்த உத்தரவு சீனாவில் பேசுபொருளானது. மேலும், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
பீக்கிங் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் இணைப் பேராசிரியரான யான் தியான், ”நிறுவனத்தின் கொள்கை சீனாவின் தொழிலாளர் சட்டத்தை மீறுகிறது. இந்தக் கொள்கை திருமண சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே அது அரசியலமைப்பிற்கு விரோதமானது” என வலியுறுத்தினார். இந்த நிலையில், அந்த நிறுவனம் இத்தகைய உத்தரவை வாபஸ் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக எந்த ஊழியரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.