18 வயது மாணவி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக, மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமாக இருந்த அவரது 24 வயது காதலனை, எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், 18 வயதுடைய மாணவி ஒருவர் வயிற்றுவலி என தெரிவித்து, அதிகாலை 3.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்
ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 5.00 மணிக்கு மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, ஜன்னல் வழியாக வீசியுள்ளார், அதனைத்தொடர்ந்து, குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து, அழுகுரல் கேட்ட நிலையில் தாதியர்கள் குழந்தையை மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, குறித்த மாணவியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது, அவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சம்பவத்தோடு தொடர்புடைய மாணவியின் காதலனான 24 வயது இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.