9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதி மற்றும் உதவியார் இருவரையும், எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் பவுஸரில் சாரதி மற்றும் உதவியாளராக கடமையாற்றி வரும் இருவரும், சம்பவதினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, எரிபொருளை பவுஸரில் எடுத்து சென்றுள்ளனர்
அங்கு பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள டாங்கியில் நிரப்பிவிட்டு, டீசல் டாங்கியில் சிறியளவு டீசலை மட்டும் நிரப்பியுள்ளனர்.
பின்பு தாங்கள் கொண்டு வந்த முழு டீசலையும் நிரப்பிவிட்டதாக சொல்லிவிட்டு, 3300 லீற்றர் டீசலை மோசடி செய்து அங்கிருந்து கடத்தி கொண்டு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் நடந்த சம்பவத்தை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பார்த்து விட்டு, உடனடியாக மட்டப்பளப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு அறிவித்துள்ளார்.
விரைந்து செயற்பட்டு, குறித்த பவுஸர் எங்கிருக்கின்றது என ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் சோதனையிட்டபோது, கல்லடிபகுதியில் பவுஸர் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக டீசலை விற்பனை செய்வதற்காக, பவுஸரில் இருந்த டீசலை எடுத்து கலன்களில் நிரப்பிக் கொண்டிருந்த நிலையில், பவுஸர் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரையும், பொலிஸார் கைது செய்ததுடன், டீசலுடன் கலன்களை மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கிரான்குளம் மற்றும் கல்லடியைச் சேர்ந்த இருவரையும், மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்திய போது, இருவரையும் எதிர்வரும் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.