தேசபந்து தென்னகோன் தலைமறைவு.. வௌிநாடு செல்லத் தடை..!

0
15

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அன்று, மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள W15 ஹோட்டல் மீது வெள்ளை வேனில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வெலிகம பொலிஸ் ரோந்து வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, வேனின் திசை நோக்கி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

வேனிலிருந்து குறித்த ஹோட்டல் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழு என்பதுடன், வெலிகம பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் வேனில் இருந்த கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பொலிஸ் சார்ஜன்ட் உபுல் குமார உயிரிழந்தார்.

இதையடுத்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் முன், பொலிஸ் சார்ஜனின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நடைபெற்று, சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, விசாரணையின் தீர்ப்பு 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பில், அந்த நேரத்தில் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளை அந்த இடத்திற்கு அனுப்பியது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது.

அதன்படி, பொலிஸ் சார்ஜனின் மரணம் ஒரு குற்றம் என்பதால், இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அவர்கள் தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர வீட்டையும் கிரியுல்லா வீட்டையும் சோதனை செய்த போதும், அவர் அங்கு இல்லை.

இதற்கிடையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here