பொலிவியா நாட்டில் ஆருரோ பகுதியில் பெரிய திருவிழா கொண்டாட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிலர் பஸ்களில் புறப்பட்டனர். அப்போது, அவற்றில் ஒரு பஸ் பொடோசி என்ற பகுதியில் வந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது.
உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே சென்றபோது அந்த சுற்றுலா பஸ், எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி பொடோசி காவல் துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இந்த கொடிய விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 39 பேர் உயுனி நகரின் 4 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் சிகிச்சை பெறும் நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என அவர் கூறினார். பஸ் ஓட்டுநர்களில் ஒருவர் குடிபோதையில் இருந்திருக்கிறார். அவர் மதுபானம் குடிக்கும்போது அதனை பார்த்தோம் என்று பயணிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா பஸ் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அதன் ஓட்டுநர் மதுபானம் குடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. ஆண்டுதோறும் பொலிவியாவின் மலைப்பாங்கான, சரியான பராமரிப்பு அல்லாத மற்றும் அதிகம் கவனிக்கப்படாத சாலைகளால் சராசரியாக 1,400 பேர் பலியாகிறார்கள்.