தமிழ்நாடு – விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 2-வது மகன் ஜெயசூர்யா (24) சட்டக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் நிலையில், ரம்யா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருவருமே அண்ணன் – தங்கை முறை என்றும், இனி இருவரும் காதலிக்கக் கூடாது என்றும் ஜெயசூர்யாவையும், ரம்யாவையும் குடும்பத்தார் கண்டித்துள்ளனர்.
ஆனால், இதற்கெல்லாம் சம்மாதிக்காத ரம்யா, ஜெயசூர்யாவை விடாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், கைகளை அறுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்த ஜெயசூர்யா, மீண்டும் காதலியுடன் பேச தொடங்கியுள்ளார். மேலும், இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்றும், என் அப்பாவாகவே இருந்தாலும் அவருக்கு எலி மருந்து கொடுத்து கொன்றுவிடுவதாகவும் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் ரம்யா.
இதனால், பயந்துபோன ஜெயசூர்யா ரம்யா உடனான தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். ஆனால், மீண்டும் காதலன் விட்டுச் சென்றுவிடுவானோ என்ற சந்தேகத்தில் அவருடய அம்மா தொலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, காதலி உருகி பேசியதால், ஜெயசூர் மீண்டும் ரம்யாவுடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து, உன்னை பார்க்க வேண்டும் என காதலி ரம்யா கூற, அதற்கு நான் வீட்டில் இருப்பதாக ஜெயசூர்யா கூறியுள்ளார்.
பின்னர், வீடு பக்கம் என்பதால், உடனே புறப்பட்டு ஜெயசூர்யா வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார் ரம்யா. அப்போது, அங்கு வந்த காதலனுக்கு தான் கொண்டு வந்த டீயை கொடுத்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்றதும் அந்த டீயில் எலி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்தார். இதைக் கேட்டு காதலன் ஜெயசூர்யா அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், உடன் இருந்த நண்பர் ஜெயசூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்ததை மருத்துவர்களிடம் கூற, உடனே திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசாரிடம், நானே எலி மருந்து குடித்ததாக கூறியுள்ளார். மேலும், காதலியின் வாட்ஸ் அப் மேசேஜையும் மறைத்துள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜெயசூர்யா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து போய் இருப்பதும், மஞ்சை காமாலை வந்திருப்பதும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஜெயசூர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை ஜெயசூர்யா உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவிக்காத நிலையில், காதலியால் தன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதால், போலீசாரிடம் நடந்த உண்மையை வாக்குமூலமாக கொடுத்துள்ளார் ஜெயசூர்யா. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலி ரம்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.