ஏற்காடு மலைப்பாதையில் ஆசிரியை விஷ ஊசி செலுத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் காதலனையும், அவனது காதலிகள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அடுத்தடுத்து 2 முறை விஷ ஊசி போட்டுக் கொலைச் செய்ததாக போலீசாரிடம் காதலன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த லோகநாயகி(35) என்ற பெண் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் ஆசிரியர் படிப்பு படித்துள்ள லோகநாயகி சேலத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்து வந்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையில் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் ஹபீஸ் (22) என்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் லோகநாயகியைக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலைக்கு அப்துல் ஹபீஸின் காதலிகள் 2 பேர் உடந்தையாக இருந்ததும், அதில் ஒருவர் மருத்துவ மாணவி என்பதும்போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.
அப்துல் ஹபீஸுடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்துல் ஹபீஸுக்கும், லோக நாயகிக்கும் இடையே 13 வயது வித்தியாசம் இருந்ததும், லோகநாயகிக்கு பெற்றோர் இல்லாததால், பெரம்பலூரில் சித்தியின் அரவணைப்பில் வளர்ந்ததும் தெரிய வந்தது. சில காரணங்களால் சித்தியை விட்டு விலகி பெரம்பலூரில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த லோகநாயகியுடன், எதிர்வீட்டில் இருந்த அப்துல் ஹபீஸுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தும் வந்த நிலையில் லோகநாயகிக்கு சேலத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அப்துல் அடிக்கடி சேலத்துக்கு சென்று லோகநாயகியுடன் பழகி வந்துள்ளார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷாவையும், சென்னையில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் தாவியா சுல்தானா எனும் இளம்பெண்ணையும் காதலித்து வந்துள்ளார் அப்துல் ஹபீஸ்.
மோனிஷாவைக் காதலிப்பது அப்துல் ஹபீஸ் வீட்டிற்கு தெரிந்து கண்டித்துள்ளனர். அப்போது தான் தாவியா சுல்தானைக் காதலித்து வருவதையும் வீட்டில் கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டினரின் சம்மதத்துடன் தாவிய சுல்தானுடன் கல்யாண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இந்த விவகாரம் லோக நாயகிக்கு தெரியவர இவர்களது திருமணத்திற்கு குறுக்கே நின்றிருக்கிறார். அப்துல் ஹபீஸுக்காக மதமும் மாறியிருக்கிறார். அதன் பின்னரும் அப்துல் திருமணத்திற்கு மறுக்கவே, “நீ என்னை ஏமாற்றினால் தற்கொலைச் செய்துக் கொள்வேன்” என லோகநாயகி கூறியதும், தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
லோகநாயகி உயிருடன் இருந்தால் பிரச்னை என்று முடிவு செய்து, அவரை தீர்த்துகட்ட தனது காதலிகளின் உதவியை நாடியுள்ளார்.
ஏற்கனவே லோகநாயகி தற்கொலைக்கு முயன்றதால் யாருக்கும் சந்தேகம் வராதப்படி கொலை செய்து எங்காவது தூக்கி வீசிவிட்டு தற்கொலை செய்துக் கொண்டது போல் செட்டப் செய்து விடலாம் என மூன்று பேரும் முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் தனது காதலி தாவிய சுல்தானாவிடம், “எனது வீட்டின் அருகில் குடியிருந்த லோகநாயகியை அக்காள் என்று கூறி பழகினேன். ஆனால் அவள் என்னை ஒரு தலைபட்சமாக காதலிப்பதாக கூறுகிறாள். எனவே, நமது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இனி லோகநாயகி இருக்கக் கூடாது” என்று புதுசாக கதையை கூறியுள்ளார். அப்துல்லின் பேச்சை அந்த பெண்ணும் அப்படியே நம்பியிருக்கிறார். அதே போன்று மோனிஷாவிடமும் பொய்க் கதைச் சொல்லி, யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் கொலை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்க அவள் மயக்க மருந்து அதிகளவில் கொடுத்தால் போதும் இறந்து விடுவாள் என்று கூறியுள்ளார். அப்துல் ஹபீஸ் சதி வலையில் இந்த 2 பெண்களும் சிக்கிக்கொண்டனர்.
அதன் பின்னர் டிரைவர் இல்லாமல் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தனது 2 காதலிகளையும் அழைத்துக் கொண்டு சேலத்திற்கு சென்ற அப்துல், அங்கே லோகநாயகியையும் ஏற்காடு செல்லலாம் என்று காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
கார் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, அப்துல் ஹபீஸும், தாவியா சுல்தானாவும் லோகநாயகியை பிடித்துக் கொள்ள, மோனிஷா அடுத்தடுத்து காரிலேயே 2 முறை விஷ ஊசி செலுத்தி லோகநாயகியை துடிதுடிக்க கொலைச் செய்துள்ளனர். அதன்ப் இன்னர் உடலை ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகில் முட்புதரில் வீசிவிட்டு திரும்பியதாக காவல்துறையினரிடம் அப்துல் ஹபீஸ் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.