மழை மற்றும் அனர்த்தங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்ட ஈட்டை விரைவில் வழங்கி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
விவசாய கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட யோசனை ஊடாக விவசாய கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் குறித்த ஒதுக்கீடுகளை உரிய வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
விவசாய தரவுகளில் காணப்படும் முழுமையற்ற தன்னை காரணமாக மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களில் தவறு ஏற்பட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய உற்பத்திகளுக்கு சந்தைக்குள் நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் பாதுகாப்பைப் போலவே நுகர்வோருக்கும் ஏற்ற வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கால்நடை வளங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாய பயிர்கள் ஊக்குவிப்பு, மில்கோ நிறுவனத்தின் முன்னெடுப்பு மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.