யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி இருந்தது.
குறித்த முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார்.
இருப்பினும் கொடுத்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிசார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
இந்த விடயமானது நேற்றையதினம் மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாகியது. இவ்வாறான பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லைத் தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.