அநுராதபுரம் கல்கிரியாகம பகுதியிலுள்ள சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பத்து வருடங்களுக்கு பின்னர் குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கலேவல பகுதியிலுள்ள புகையிலை செய்கை செய்யும் தோட்டம் ஒன்றில் தலைமறைவாக இருந்தபோது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (07) சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய அநுராதபுரம் கல்கிரியாகம பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் சந“தேக நபர் ஆஜராகாததை அடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கல்கிரியாகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகநபரை கைது செய்ய முடியாமல் போனதை அடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வந்த தீவிர விசாரணைகளின் பின்னணியில் சந்ததேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபருக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டி இருந்ததுடன், அதனை சாதகமாக பயன்படுத்தி சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார் என்பது மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.