யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து, அநாகரிகமாக நடந்து கொணடார் என்ற குற்றத்தில் யூடியூப்பர் கிருஸ்ணா உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டுக்குள் இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இந்நிலையில் குறித்த காணொளியில் காணப்பட்ட குடும்பத்தினர் பண்டத்தரிப்பு பகுதியில் வசித்து வரும், நிலையில் அவர்களுடன் சமரசம் பேச சென்ற சமயம், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யூடியூப்பரையும் அவருடன் சென்ற மூவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், நால்வரையும் இன்றைய தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, குறித்த யூடியூபருடன் இணைந்து வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து காணொளி எடுப்போர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களையும் கைது செய்து மன்று முற்படுத்துமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.