இந்தியாவின் உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான சுபாங்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 மாத இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தம்பதியின் இரண்டு கைக்குழந்தைகளும் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளன.
இதையடுத்து, குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது குழந்தைகள் திடீரென உயிரிழந்ததால் மகேஷ் சக்லனிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கணவன் மகேஷ் சக்லனி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் தாயான சுபாங்கியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுபாங்கி, தான் வெளியே கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு வீட்டிற்க்கு திரும்பி வரும் போது, குழந்தைகள் மயங்கி கிடந்ததாக கூறியுள்ளார். கணவர் அப்போது வீட்டில் இல்லாத நிலையில், சுபாங்கி முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சுபாங்கியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்ததாகவும், குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தாய் தவித்துள்ளார். ஆனால் என்ன செய்தாலும், குழந்தைகள் தொடர்ச்சியாக அழுததால் விரக்தி அடைந்த தாய், குழந்தைகள் மீது தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார்.