சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
வருகையின் போது, சந்தேக நபர், அதிக மது போதையில் இருந்தபோது, விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் விமானியிடம் சம்பவம் தொடர்பில் முறையிட்டதை தொடர்ந்து, அவர் இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு வைத்திய பரிசோதகரிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் அதிக அளவில் மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இலங்கை வான்வெளிக்குள் நடந்ததால், சந்தேக நபர் இன்று (16) கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யாழ் நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.