கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச, இன்று (19) உத்தரவிட்டார்.
மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார்.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் இன்று (19) காலை ஆஜரானார்.
ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை சோதனை செய்ததாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அங்கு 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் அடங்கியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
அத்துடன் அவரது துப்பாக்கி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பிஸ்டல் வகை ஆயுதத்தையும், இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.