இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில், தகாத உறவில் இருந்ததைக் கண்டுபிடித்த, கடற்படை அதிகாரியான கணவரை, கொலைசெய்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி கைது செய்யப்பட்டார்.
கடற்படை அதிகாரியான மீரட்டைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புட், பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார்.
அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரவ், லண்டனில் இருந்து, முன்னறிவிப்பின்றி, கடந்த 4-ஆம் தேதி மீரட்டிற்கு வந்தார். ஆனால், அவரது மனைவியான மஸ்கன், சாஹில் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்தார்.
அப்போது ஏற்பட்ட மோதலில், மஸ்கன் மற்றும் சாஹில் இணைந்து, கடற்படை அதிகாரியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, டிரம்மிற்குள் (DRUM) அடைத்து சிமெண்ட் போட்டு பூசி விட்டு, தலைமறைவாகி விட்டனர்.
15 நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில், சவுரவின் உடலை அழுகிய நிலையில் காவலர்கள் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், தலைமறைவாக இருந்த மஸ்கன் மற்றும் சாஹிலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கோழியை வெட்டுவதற்கு எனக் கூறி கத்திகளை கடையில் இருந்து வாங்கியதும், அதை வைத்து இருவரும் சேர்ந்து சவுரவை கொலை செய்து அவரின் உடலை 15 துண்டுகளாக வெட்டியதும் தெரியவந்துள்ளது. அதேபோல், உடலில் இருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக டிரம்மிற்குள் (DRUM) அடைத்து சிமெண்ட் போட்டு பூசியத்தையும் போலீஸ் வாக்குமூலத்தில் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். கணவரை கொலை செய்த பின் மனைவி மஸ்கன் தனது காதலர் சாஹிலுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அங்கே 13 நாட்கள் தங்கிய இருவரும் அக்கம்பக்கத்தினரை தவறாக வழிநடத்த சவுரவின் இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கே கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதன்பின்னர் மார்ச் 17 அன்று மீரட்டுக்குத் திரும்பியதாக போலீஸார் கூறியுள்ளனர்.
முன்னதாக ஊடகங்களிடம் பேசிய சவுரவின் தாயார், இந்தக் கொலையை பற்றி அக்கம்பக்கத்தினரிடம் சவுரவின் 6 வயது மகள் கூறியதாக வெளிப்படுத்தினார். தனது தந்தையை டிரம்மில் அடைத்து வைத்துள்ளதாக சிறுமி கூறியதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், “சிறுமி இந்த கொலையை அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ‘அப்பா டிரம்மில் இருக்கிறார்’ என்று சவுரவின் மகள் சொன்னதாக அக்கம்பக்கத்தினர் எங்களிடம் கூறினர். எனவே, கொலையை அவரின் மகள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது” என்று சவுரவின் தாயார் கூறியிருக்கிறார்.