மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.