மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் – அக்கரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்த பெண் மூதூர் -அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.லரீபா (வயது-45) என தெரியவருகிறது.
உயிரிழந்த பெண் மூதூர் – அக்கரைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இரவு நேர தொழுகை முடித்துவிட்டு வீட்டுக் செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்டபோது வருகை தந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியுள்ளது. இதில் அப்பெண் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதியான 19 வயது இளைஞனும் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (video-fb)