சென்னையில் ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற 9ம் வகுப்பு மாணவி அனிதா பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரத்தை கையாள்வதில் மக்களுக்கு சில சமயங்களில் அலட்சியம் அதிகமாக இருப்பதை நாம் காணலாம். இதுபோன்ற அலட்சியப் போக்கினால் பல நேரங்களில் விபரீதங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில், மின்சாரம் தாக்கி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறி உள்ளது.
சென்னையில் பெற்றோருடன் வசித்து வரும் அனிதா எனும் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி, வீட்டில் இருந்த செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது, ஈர கைகளால் சார்ஜ் போட்டதில் அனிதா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு அனிதா கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அனிதாவை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் மாணவி அனிதா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற போது மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.