குருநாகல் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் வதிவிடக் கல்வியை பெற்று வந்த பத்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, தாக்கி, காயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அந்த நிறுவனத்தின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் தலைமையக பொலிஸாரால் அந்த அதிபர் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் குருநாகல், உடவலவல்பொல வீதியில் இந்த தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தி வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் ஜயந்திபுர வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிபராகவும் செயற்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து அங்கு தங்கியிருந்து படித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவிகள் தாங்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து குருநாகல் தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில், முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்களுக்கு சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலத்தில் வதிவிடக் கல்வியை வழங்கி, பின்னர் அவர்களை பொது பரீட்சைகளுக்கு அனுப்பும் அடிப்படையில் இந்த தனியார் கல்வி நிறுவனம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வி நிறுவனத்தில் மாணவிகள் மட்டுமே வசிப்பதுடன், அதே நேரத்தில் மாணவர்களுக்கு வேறொரு இடத்தில் குடியிருப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவின் மட்டுமே தங்கியுள்ள விடுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வார்டன்கள் தேவைப்பட்டாலும், மாணவிகளை மேற்பார்வையிடுவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் சுமார் 25 மாணவிகள் கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. படிக்கும் நேரத்திலும், இரவிலும் பெண் மாணவிகளின் உடல் உறுப்புக்களை தடவி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் முறைப்பாடு எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்காக என்று கூறி, அவர்களை தங்கள் கார்களில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சில மாணவிகளை அவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் விளைவாக மாணவிகள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
கண்டி பகுதியில் இதேபோன்ற கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, மாணவிகள் குழுவை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவிகள் குழு நேற்று (23) வைத்திய பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.