காசாவில் இருந்து வெளியேறும்படி பொது மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு.!

0
37

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், 17 மாதங்களாக நடந்த போரை நிறுத்தி வைக்க போர்நிறுத்த ஒப்பந்தம் உதவியாக அமைந்தது. எனினும், ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.

1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், காசா நகரில் உள்ள பல பகுதிகளில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. அவர்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி கூறியுள்ளது.

இதன்படி, ஜெய்தவுன், டெல் அல்-ஹவா மற்றும் பக்கத்திலுள்ள பிற நகரங்களில் உள்ள மக்களையும் வெளியேறி விடும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. 17 மாத கால போரின் பகுதியாக, இந்த பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

59 பணய கைதிகளில் உயிருடன் உள்ள 24 பணய கைதிகள் திரும்பும் வரை ராணுவ தாக்குதல் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஆனால், காசாவில் இருந்து முழு படைகளையும் இஸ்ரேல் வாபஸ் பெறாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்படாவிட்டால், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. இதனால், காசா பகுதி மக்களின் நிலை சிக்கலில் தள்ளப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here