காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (26) கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16 ஆயிரத்து 966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்றாயிரத்து 742 பேர் படையினர் மற்றும் காவல்துறையினர் என பாதுகாப்பு தரப்பினராக காணாமல் போயுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் ஆறாயிரத்து 449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 10 ஆயிரத்து 517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
2000 ஆம் ஆண்டிற்கு பின்பு 7 ஆயிரத்து 406 பேரும், 2000 ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9 ஆயிரத்து 560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதிலே 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன ஏழாயிரத்து 406 பேரில் ஆறாயிரத்து 449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.
நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம், அவை விரைவில் வெளிவரும்.
அதேவேளை இரண்டாயிரத்து, 604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர், 407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபாரிசை பெற்றுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்திற்கு நான்காயிரத்து 408 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.