சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய தம்பதியினர் இன்று (27) பிற்பகல் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 30 வயதான இந்திய தம்பதியினர், அவர்களது 6 வயது பிள்ளையுடன் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து சிறிலங்கன் விமானம் மூலம் இந்த தம்பதியினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்தபோது இரண்டு பயணப்பைகளில் சூட்சுமமாக சொக்லேட் ரேப்பர்களில் சுற்றப்பட்ட 2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த போபை்பொருளில் இருந்து வௌியேறும் மணம் விமான நிலைய வருகை முனையத்தில் பல மணி நேரம் பரவியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் இதற்கு முன்பும் ஒரு முறை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் தம்பதியினரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.