பிரிட்டன் தடை குறித்து கருணா கூறியது..!

0
72

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடை விதித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாண சபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் எனவே முதலில் தோற்கடிக்க வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா இன்று (27) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கின்றோம். முக்கியமாக முதல் முறையாக ஓர் அணியாக திரண்டு ஒரு கூட்டாக களமிறங்கியுள்ளோம். எனவே ஒவ்வொரு வேட்பாளரும் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

தற்போது கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிற்பாடு இதனை பெறுத்துக் கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்துள்ளதுடன், இவ்வளவு காலமும் இல்லாத எதிர்ப்பு உருவாகி கொதித்துக் கொள்கின்றனர் மட்டக்களப்பு தமிழில் சுங்கானில் கொதிக்கின்ற மாதிரி கொதிக்கின்றனர்.

இதைபற்றி புலம்பெயர்ந்து வாழுகின்ற படித்தவர்கள் புத்திஜீவிகள் வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை அங்கு றோட்டு கூட்டித்திரிகின்றவர்கள் மலசல கூடம் கழுவுபர்கள் தான் கத்துவது அவர்கள் தான் கொதிக்கின்றனர். அடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடைய தோல்விக்கான அத்திவாரத்தை போட்டுள்ளோம் .எனவே அவர்களை முதலில் தோற்கடிக்க வேண்டும்.

அவர்கள் போலி தேசியத்தை பேசிக் கொண்டு தேசியம் தேசியம் என கூறி மக்களை ஏமாற்றி இடைப்பட்டு இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்து கொண்டு இன்று தமிழ் தேசியம் என சொல்லுகின்றனர்.

அண்மையில் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் நடிகர் வடிவேலின் கிணத்தை காணவில்லை என்ற பகிடி மாதிரி விளையாட்டு மைதானத்தை காணவில்லை. இவர்களுடைய வண்டவாளங்கள் வரும் எனவே இதை புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.

உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள் மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும் அவர்களுக்கு தான் இந்த உரிமையும் மக்களை நடாத்தும் திறமையும் இருக்கின்றது.

நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகின்றது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடைவிதித்தது நாங்கள் என்ன பிச்சையா எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை கூட்டுச் சேர்ந்ததும் தடைவிதிக்கின்றனர். இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான்.

பிரிட்டிஸ் அரசாங்கத்தால் நான் 2006 கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன் அப்போது 8 மாதம் இருந்த போது கண்டுபிடிக்காத குற்றைச்சாட்டை இப்போது தான் பிரிட்டன் அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. எப்படியான ஒரு மொக்கு அரசாங்கம் அந்தநேரம் கண்டுபிடித்து கையில் விலங்கைபோட்டு கொண்டு சென்றிருக்கலாம்.

ஆனால் அரச மரியாதையுடன் கட்டுநாயக்கா விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள் அப்படிபட்ட பிரிட்டிஸ் அரசாங்கத்துக்கு இப்பதான் விளங்கியிருக்கு கருணா அம்மான் பிழை விட்டுள்ளார் என. ஆகவே இது எல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கை இதற்காக புலம் பெயர்ந்து வாழுகின்ற சில அடிவருடிகள் ஒத்துழைத்துவருகின்றனர்.

காய்கின்ற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற பழமொழிக்கமைய காய்க்கின்ற எங்களுக்கு எறிவிழுகின்றது எனவே வெற்றிகுறி தென்படுகின்றதுடன், கிழக்கு மாகாணசபையை நாங்கள் கைப்பற்றுவோம் இந்த கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராக்கி இருப்பே கேள்விக்குறியாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் கல்முனை மாநகரசபையில் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதேபோல கடந்த காலத்தில் மட்டக்களப்பில் 8 இடத்தை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இவர்கள் இப்போது தேசியம் கதைக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 70 வீதமான மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய்க்கு வந்தமாதிரி கதைப்பது அதாவது எல்லா நாம்பன் மாடும் வாலை கிளப்பி ஓடுதென்று பசுவும் வாலை கிளப்பி ஓடியது என்ற பழமொழி போல தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதலில் யார் என்று தெரியாத பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் வாலைக் கிளப்புகின்றார். இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான் அந்த காலத்தில் அவர் எங்கிருந்தார் என்று தெரியாது ஆகவே நாங்கள் வெல்லப் போவது உறுதி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here