தமிழகத்தின் தலைநகர் சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் வசித்து வருபவர் அக்ரம் ஜாவித். இவருக்கு 2021 ல் உறவினரான நிலோபர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அக்ரம் ஜாவித் தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக பிரச்சனையில் ஈடுபடுவதுமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்றைய முன் தினம் திங்கட்கிழமை அதிகாலை குழந்தை மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாக ஜாவித் குடும்ப உறுப்பினர்களை நம்ப வைத்து நாடகமாடியுள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த நிலோபரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், பிரேத பரிசோதனையில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அத்துடன் விசாரணையிலும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 2022 ம் ஆண்டு குழந்தை பிறந்தது முதல் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குழந்தையை அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதும் தாய் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு பசியால் வாட வைத்தும் வந்துள்ளார். பிரேத பரிசோதனையின் மூலம் பெண் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது .
ஜாவித்தின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு ஆண் நண்பர் இருந்து வருவதாகவும் தாங்கள் இருவரும் கருப்பாக இருக்கும் பட்சத்தில் குழந்தை மட்டும் எப்படி சிகப்பாக பிறந்தது என சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் அளித்ததையடுத்து போலீசார் பச்சிளம் குழந்தை எனவும் பாராமல் பெற்ற பெண் குழந்தையை படுகொலை செய்த அக்ரம் ஜாவித்தை கைது செய்து தீவிர விசாரணை முடித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஜாவித்தை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.