பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் தென்னை பயிர்செய்கை சபையினால் முன்னெடுத்துவரும் தென்னை விவசாயிகளுக்கு நிவாரண விலையில் உரம் வழங்கும் திட்டம் மார்ச் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெற்றிக் தொன் MOP உரத்தை எப்பாவல ரொக் பொஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தென்னை பயிர் செய்கைக்காக 56,700 மெற்றிக் தொன் விசேட AMP உரத்தைத் தயாரிக்க அரசாங்க உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது.
குறித்த உரத்தை நிவாரண விலையில் விநியோகிக்கும் செயற்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை தென்னை பயிர்செய்கை சபை முன்னெடுத்து வருகிறது.
சந்தையில் 9,000 ரூபாவுக்கு காணப்படும் 50 கிலோகிராம் உர மூடையை 4,000 ரூபா என்ற நிவாரண விலையில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இம்மாதம் 30 ஆம் திகதி வெல்லவாய பிரதேச செயலகத்தில், தென்னை பயிர்செய்கை சபையின் ஹந்தபானாகல பகுதியில் தென்னை நாற்றுகளை நடும் பணியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
5 ஏக்கருக்கு குறைவானதும் முதல் 1/4 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட 350,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னை பயிர்செய்கை நிலங்கள் இருப்பதாக கூறிய அமைச்சர், இது தென்னை விவசாயிகளில் பெரும் பகுதியினருக்குப் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
5,600 மில்லியன் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த தென்னை உரத்தைப் பயன்படுத்தி நாட்டின் தேங்காய் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கம் என்றும், இந்த உரத்தைப் பயன்படுத்திய 1½ ஆண்டுகளுக்குப் பிறகு விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிவாரணத்தைப் பெற, தென்னை விவசாயிகள் தென்னை பயிர்செய்கை சபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை தென்னை பயிர்செய்கை சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://coconutsrilanka.lk/ என்ற முகவரியில் பார்வையிட்டுப் பெறலாம்.