யாழில் மாணவியை தடியால் கையில் அடித்த ஆசிரியர் கைது..!

0
172

யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்தமைக்காக ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

“குறித்த பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (26) பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை விடைத்தாள்கள் சக மாணவர்களைக் கொண்டு ஒருவர் மாறி ஒருவரால் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட குறித்த மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதை குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை வழங்கியுள்ளார்.

இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மாணவி, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நேற்று (27) மாலை குறித்த வகுப்பில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை காவல் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியரை காவல்துறை காவலில் வைத்துள்ள நிலையில் இன்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(IBC)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here