முல்லைத்தீவில் கடலில் மூழ்கி உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான சோகமான செய்தி.!

0
94

புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பகுதியிலிருந்து, தையல் பயிற்சி மாணவிகளும் ஆசிரியருமாக 13 பெண்கள் வாடகைக்கு வாகனத்தினை அமர்த்தி சுற்றுலாவுக்காக நாயாற்றுப் பகுதிக் கடற்கரைக்கு வருகை தந்து மகிழ்ச்சியாக மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில், தையல் பயிற்சி ஆசிரியர் உட்பட மூன்று பெண்கள் நாயாற்று முகத்துவாரக் கடலில் நீராடிக் கொண்டிருந்தார்கள்.

முகத்துவாரப் பகுதி என்பது, ஆறும் கடலும் சங்கமமாகும் பகுதியாகும். இந்தப் பகுதியில் நீரோட்டம் தொடர்பாக “வடு” “வெள்ளம்” என்ற இரண்டு சம்பவங்கள் மாறி மாறி நடைபெறும். அதாவது, வடு என்பது, ஆற்றிலிருந்து கடல் நோக்கி நீரோட்டம் இருக்கும். வெள்ளம் என்பது, கடலிலிருந்து ஆறு நோக்கி நீரோட்டம் இருக்கும். இவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது வடு நீரோட்டமே இருந்தது. அதாவது, ஆற்றிலிருந்து கடல் நோக்கி நீரோட்டம் காணப்பட்டிருந்தது. அத்துடன், இன்றைய தினம் கடல் அடியும் வழமையை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

மூன்று பெண்களும் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென கடல் நீரில் மூவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆசிரியர் மற்றைய இரு பெண்களையும் தன்னால் முடிந்தவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுத்திருந்தார்கள். இருந்த போதும், அதையும் மீறி கடல் நீரானது மூவரையும் இழுத்துச் சென்றுள்ளது. இந் நிலையில், சேர்ந்துவந்த ஏனைய பெண்கள் ஆபத்தான நிலையினை அவதானித்தும் என்ன செய்வதென்று தரியாது பதை பதைத்து நின்று பரிதவித்துள்ளனர்.

இந் நிலையினை எதிர்பாராத விதமாக அவதானித்த மீனவர் ஒருவர் மிக விரைவான முறையில் செயற்பட்டதன் காரணமாக, ஏனைய மீனவர்களும் விரைவாக செயற்பட்டு மூவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு யுவதி நீரில் மூழ்கிய நிலையில் தலைமுடியை பிடித்து இழுத்து வெளியே எடுத்து படகில் ஏற்றினர். மற்றைய யுவதி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது படகில் ஏற்றியுள்ளனர். மற்றைய யுவதியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், காப்பாற்றிய இரு பெண்களையும் கரைக்கு கொண்டு வந்து மீனவர்களின் வாகன உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது பெண்ணை மீனவர்கள் தேடிய வண்ணமே இருந்தனர். முதல் இரு பெண்களையும் காப்பாற்றி அரை மணித்தியாலங்கள் கடந்த நிலையில், மூன்றாவது யுவதியை மீனவர்கள் கண்டுபிடித்து கரைசேர்த்த போதும், யுவதியை உயிருடன் மீட்க முடியவில்லை. குறித்த யுவதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக யுவதியின் தந்தை சொல்லி அழுத போது அந்த இடமே சோகமயமானது.

குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.

பெண்கள் சுற்றுலா வந்த வாகனம், வாகன சாரதி மற்றும் ஏனைய பெண்களை மேலதிக விசாரணைக்காக கொக்கிளாய் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். மேலதி சிகிச்சைகெகாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட இரு பெண்களில் ஒரு யுவதியின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதனால், அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இதுவரை சிகிச்சைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.

குறித்த கடற்கரைப்பகுதி மிகவும் ஆபத்தானது பாதுகாப்பாக இருக்குமாறு அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதும், இவ்வாறானதொரு துன்பியல் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக சமைத்து சாப்பிட்டு பொழுதைக் கழிப்போம் என்ற மகிழ்ச்சியில் வருகை தந்து, மதிய உணவு சமைத்தது பாதி சமையாதது பாதி என பதைபதைத்து செய்வதறியாது திகைத்து நின்ற அந்தச் சூழலும் சூழ்நிலையும் மேலும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னரும் இதே போன்ற சம்பவங்களும் சில இறப்புகளும் இந்தப்பகுதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான நிலையினையறிந்து மிக விரைவான முறையில் உயிர்மீட்கும் பணியினை மேற்கொண்ட மீனவர்களுக்கு இரு கரங்கள் கூப்பி நன்றி கூறுகின்றேன். மேலும், இந்த இடத்திற்கு சுற்றுலா வரும் உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!! குறித்த பகுதியிலுள்ள நிலப்பகுதியில் உங்களுடைய சந்தோசமான பொழுதுகளை கழியுங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், நீர்நிலையில் இறங்குவதனை தவிர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானதாகும். (Manokaran Vinoth)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here