ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்குமுன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 886 பேர் உயிரிழந்தனர். அதேபோல், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும், சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்தப் பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.