வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பதுளையைச் சேர்ந்த இந்த இளைஞன் ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், முதலாம் திகதி, இராஜகிரிய பகுதியில் தங்கும் விடுதியைத் தேடிச் சென்றபோது, ஒரு கும்பல் முச்சக்கர வண்டியில் அவரைத் துரத்திச் சென்றுள்ளது.
இதனால் பயந்துபோன அந்த இளைஞன், அருகிலுள்ள வீட்டிற்கு நுழைந்துள்ளார். எனினும், அங்கிருந்தவர்கள்,திருடன் என்று நினைத்து, கட்டி வைத்து, பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாளில், அதாவது முதலாம் திகதி, குறித்த இளைஞர் தனது தாயாருக்கு தொலைபேசிவாயிலாக, பொலிஸ் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் நிர்வாக இயக்குநர், சட்டத்தரணி சேனக பெரேரா, விசாரணை நடத்தக் கோரி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இதன்படி, குறித்த கடிதத்தில்…
“இளைஞரின் தாயார் மற்றும் பிற தகவல்களின்படி, இந்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்தபோது பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். அதாவது, ஏப்ரல் இரண்டாம் திகதி அந்த இளைஞன் இறந்துவிட்டதாக தாய் அறிந்துள்ளார்.
இளைஞரின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது, உடல் ஏற்கனவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. மேலும் விசாரணையில், அந்த இளைஞன் அணிந்திருந்த ஆடைகளை கூட பொலிஸார் மறைத்து வைத்திருந்தனர்.
ஆடை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது. உயிரிழந்த இளைஞன் பயன்படுத்திய தொலைபேசி அழிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கின்றன. இது தற்கொலை என்று பொலிஸார் தாயாரிடம் கூறியுள்ளனர்.