ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து பிரியங்கா என்ற 24 வயது பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – டெல்லியில் கபஷேரா பகுதியில் ‘ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ்’ என்ற தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது காதலனுடன் பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலந்த காயமடைந்தார்.
உடனே அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். இயந்திரங்களை அலட்சியமாக இயக்குதல், அலட்சியமான நடத்தையால் மரணம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கபஷேரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பிரியங்கா நொய்டாவில் உள்ள தொலை தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மாதம் நிகில் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. அடுத்த வருடம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன் தன் குடும்பத்தை நிதி ரீதியாக தயார் செய்து கொள்வதற்காக திருமணத்தை அடுத்த வருடம் தள்ளி போட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.