கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கைன் போதைப்பொருளுடன் இந்தியப் பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய இந்தியாவின் மிசோராம் பகுதியைச் சேர்ந்த பெண் ஆவார்.
முதற்கட்ட விசாரணையில் அவரது கடவுச் சீட்டை பரிசோதனைக்குட்படுத்தியதில், அவர் இதற்கு முன்பு மூன்று முறை நாட்டிற்கு வருகை தந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இன்றையதினம் 02.14 மணியளவில், அவர் இந்தியாவின் சென்னையிலிருந்து 6E-1171 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கோடியே 57 இலட்சத்து 66 ஆயிரம் பெறுமதியுடைய 01 கிலோ 644 கிராம் கொக்கைன் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்றையதினம் 01.30 மணியளவில், கைது செய்யப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் தங்கியிருந்து போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ள தயாராக இருந்த இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாலபே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்றையதினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.