மட்டக்களப்பு – வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை குற்றப்புலானாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது…
கடந்த 2018 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மட்டக்களப்பு – வவுணதீவு, வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபல் தினேஸ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் போராளியான விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்ற அஜந்தன், பாவித்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசப்பட்டு கிடந்ததாகவும், அந்த படுகொலையை அவரே செய்ததாகவும் அறிக்கையிட்டு பொலிஸார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டார்.
இந்நிலையில், 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சரீப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ் மற்றும் நில்காம் ஆகிய 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைகப்பற்றியதையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிவரும் தேசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த இருவரையும் சிஐடியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கொழும்புக்கு வரவழைத்த சிஐடி அவரை கைது செய்துள்ளனர்.C