அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த காதல் மனைவி, அவரின் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி தீபக் குமார் – ஷிவானி. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு, 6 மாத ஆண் குழந்தை உள்ளது. 29 வயதான தீபக், சிஆர்பிஎஃப்-ல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர், ரயில்வே துறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வீட்டு பூஜை அறையில் இருந்த தீபக் மாரடைப்பால் மரணமடைந்ததாக, அவரின் மனைவி ஷிவானி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை அறிந்து தீபக்கின் சகோதர் பியூஸ் பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் தீபக்கின் உடலை, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று பியூஸ் கோரியுள்ளார்.
அதற்கு ஷிவானி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தீபக்கின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், உடற்கூராய்வு அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது அம்பலமானது. பின்னர், தீபக்கின் மனைவி ஷிவானியை பிடித்து செய்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப பிரச்சினையால் கணவரை கொலை செய்துவிட்டு, அவரின் ரயில்வே பணியை கபளீகரம் செய்ய ஷிவானி சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அதற்காக, சம்பவத்து அன்று அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு, உதவிய ஆண் நண்பரும், ஷிவானியுடன் கைது செய்யப்பட்டார்.
அண்மையில் மீரட்டில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை, மனைவியே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஓய்வதற்குள் பிஜ்னோரில் அரசு வேலையை கைப்பற்றுவதற்காக காதல் கணவனை, மனைவியே கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய சம்பவம் உத்தரபிரதேசத்தை உலுக்கியுள்ளது.