கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
முறக்கொட்டாஞ்சேனை சேமன் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திவெளி பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜராகுமாறு அவரை பிணையில் விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்துவதற்கு பணத் தேவை ஏற்பட்டதையடுத்து மகளிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை கோரியுள்ள நிலையில் அவரிடம் அந்தளவுக்கு பணம் இல்லாததை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாசிவன்தீவு ஆற்றில் சடலம் ஒன்று நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்த நிலையில், குறித்த சடலத்தை சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.