கொழும்பு – வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் கடந்த 13ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்ற இரண்டு சிறுவர்களுடன் ஒரு கடைக்குச் சென்றிருந்தான். அங்கு அந்தக் கடைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் வாயிலைத் தட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, அந்த வீட்டில் வசிக்கும் ஒரு நபர் சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் தூக்கிச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார்.
அங்கு பயந்துபோன சிறுவன் அந்த அறையின் ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இதற்கு உதவியாக இருந்த 59 வயதுடைய ஒரு நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.