முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய தகவல் குறித்து அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே சட்டத்தரணி என்ற வகையில் தாம் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்கச் சென்றதாக உதய கம்மன்பில கூறினார்.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சிவநேசதுரை சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில, செயல்பட்டதன் காரணமாக, அவரது கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் அரை மணி நேரம் கலந்துரையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதன்போது, தாம் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் வேதனையான வாழ்க்கை குறித்து விளக்கியதாகவும் சில சமயங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.
அரசாங்கத்தின் பழிவாங்கல்கள் குறித்து பிள்ளையான் ஆழ்ந்த கவலையை கண்ணீருடன் வெளியிட்டு, இலங்கை ஆட்சியாளர்கள் தன்னை நன்றாக பயன்படுத்தி விட்டு இப்போது கைவிட்டு விட்டார்கள் என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
கடத்தல் விவகாரம் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்ட போதிலும் இப்போது ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தை தன்னுடன் கோர்ப்பதற்கு விசாரணையாளர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கத்தின் விசாரணைகள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளுப்படுவதாகவும் போர்க் காலத்தில் தன்னை நன்கு பயன்படுத்திய இதே தரப்பினர் தற்போது அரசியல் காரணங்களுக்காக தன்னை பழிவாங்குவதாகவும் இது தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட கம்மன்பில்ல உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய பிள்ளையானுக்கு இப்படியான அநீதிகளை செய்வது நியாயமா ?இப்படியானவருக்கு படுக்கை வசதி கூட செய்யாமல் இருப்பது மோசமான நடவடிக்கை இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து பிள்ளையானிடம் கேட்டு அறிந்து கொண்ட உதய கம்மன்பில இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.