இந்தியாவில் ஆந்திராவில் நிறைமாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த மதுரவாடா காலனியை சேர்ந்தவர்கள் ஞானேஸ்வர ராவ் – அனுஷா தம்பதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஸ்கவுட்ஸ் சர்க்கிள், சாகர் நகர் வியூ பாயிண்ட் ஆகிய இரண்டு இடங்களில் ஞானேஷ்வர் துரித உணவகங்களை நடத்தி வருகிறார். அனுஷா கர்ப்பமான நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு சடங்கை ஞானேஸ்வர் மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரசவ தேதி நெருங்க நெருங்க ஞானேஸ்வருக்கு அனுஷா மீது சந்தேகம் ஏற்பட தொடங்கி உள்ளது. கர்ப்பிணி மனைவியை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய ஞானேஸ்வர், அனுஷாவிடம் தொடர்ந்து சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் பிரசவத்திற்கு 24 மணி நேரம் இருந்த நேரத்தில் நேற்று மனைவியிடம் மீண்டும் ஞானேஸ்வர் சண்டை போட்டுள்ளார்.
அப்போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஸ்வர், மனைவி அனுஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். அனுஷா உயிரிழந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்து விட்டது. அனுஷாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்த ஞானேஷ்வர், அனுஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை உடனடியாக வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார்.
விரைந்து வந்த உறவினர்கள், அனுஷா மயக்கம் அடைந்து இருக்கிறார் என்று நினைத்து, அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே இறந்து விட்டார் என்றும், வயிற்றில் உள்ள குழந்தையும் இறந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அனுஷாவின் உறவினர்கள் கதறி அழுதது, அனைவரையும் கண் கலங்க வைத்தது. இதையடுத்து, அனுஷாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளிக்க, ஞானேஷ்வரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அனுஷா மீது இருந்த சந்தேகத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஞானேஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் பிரசவம் நடக்க இருந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. (பிரதி)