கிளிநொச்சி பாடசாலை சம்பவம்; குறித்த நபரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக தமிழரசுக்கட்சி அறிவிப்பு.!

0
48

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தியோ அலன்டீலன் தமது கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர் எனவும், குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் சந்தியோ அலன்டீலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர் எனவும், மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக இடை நிறுத்துவதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரியப்படுத்தி பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் சாந்தியோ அலன்டீலனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

‘கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விடயத்தில் நீங்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் மோசமானதாகும். ஆகையினால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை கட்சி உறுப்புரிமையிலிருந்து தாங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படுகிறீர்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.