மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை அடைந்தது – நாமல்.!

0
26

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன. விசேடமாக திருகோணமலை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மூதூர் தொகுதிக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் தலைமையில், வியாழக்கிழமை (17) கிண்ணியா பிரதேச சபை கேட்போர் கூடத்தில், இந்த கூட்டம் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது எதிர்கால ஆட்சியில், இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு, முன்னுரிமை வழங்குவோம். திருகோணமலை மாவட்டம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே அடைந்தது. இதனை யாரும் மறுக்க முடியாது.

கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற ஒரு தேர்தலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், திறமையான, நேர்மையான இளைஞர் யுவதிகளை களம் இறக்கி உள்ளோம்.

எனவே, உங்கள் கிராமத்துக்கு பொருத்தமான தலைவர்களை வாக்களித்து தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மேலும் தெரிவித்தார்.