திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
காயமடைந்த நபர் ஹட்டன், கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவர் குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டார். அதேவேளை, அவர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான காதல் உறவை பேணி வந்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டப்பூர்வ மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, குறித்த நபர் இரும்பு கம்பியால் அவர் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இவர்களை சமாதானம் செய்வதற்காக நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு சட்டப்பூர்வ மனைவி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, கணவர் தனது மனைவியுடன் சுமூகமாக வாழ்வதாக பொலிஸ் நிலையத்தில் உறுதியளித்தார்.
எனினும், குறித்த நபர் தனது கள்ளக்காதலியுடன் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலையில் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அதனை பார்த்து ஆத்திரமடைந்த அவரது மைத்துனர்கள் கூரிய ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், மாமனார் தான் வழங்கிய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ள நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் (18) ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டதால், கொட்டகலை சுரங்கப்பாதை அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.