மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்து.. கணவன், மனைவி உயிரிழப்பு.!

0
52

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில், கலேவெல திசையிலிருந்து குருநாகல் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த நாய் ஒன்றுடன் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதி, அவருடன் பயணித்த பெண் மற்றும் குழந்தையும் காயமடைந்து கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதியும் பெண்ணும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்துள்ள குழந்தை மேலதி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 31 வயதான ஆணும் 21 வயதான பெண்ணுமே உயிரிழந்தனர். இந்த தம்பதியினர் தெஹியத்தகண்டியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்துள்ள தம்பதியரின் ஒன்றரை வயது மகன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

சடலங்கள் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.