டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பில் வௌியான தகவல்கள்..!

0
24

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்ததன் பின்னணியில் பல்வேறு விடயங்கள் வௌியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு டேன் பிரியசாத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தக் கொலையை மேற்கொண்டதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பாதாள உலகக்குழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் ஒப்பந்த துப்பாக்கிதாரிகளால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

டேன் பிரியசாத் கடந்த 22ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டேன் பிரியசாத் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

டேன் பிரியசாத்தின் மனைவியின் தங்கையின் கணவர் மற்றும் அவரது தந்தை மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

2022 ஆம் ஆண்டு டேன் பிரியசாத்தின் சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அவர்கள் இருவரும் பிரதான சந்தேக நபர்களாவர்.

அதன்படி, நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் வௌிநாட்டு பயணத் தடை விதித்துள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள குறித்த இருவரும் இதுவரையில் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறான சூழலில் கொலையைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் துலான் மதுசங்க என்ற ‘துலா’, இன்று (24) வெல்லம்பிட்டியில் வைத்தி மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் 5 கிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அவர் சந்தேகநபர்களான தந்தை மற்றும் மகனின் நெருங்கிய உறவினர், மேலும் டேனின் சகோதரனைக் கொலை செய்ததிலும் குற்றம் சாட்டப்பட்டவர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ​​நான்கு நாட்களுக்கு முன்புமுச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது, டேன் பிரியசாத் அதனை நிறுத்தி அவரையும் மற்றொரு நபரையும் தாக்கியது தெரியவந்தது.

பின்னர் கொலன்னாவையைச் சேர்ந்த தனுஷ்கவிடம் இது குறித்து கூறியபோது, ​​”ஒரு நிமிடம் பொறுங்கள், நான் கஞ்சிபானி இம்ரானை இணைக்கிறேன்” என்று கூறி, ஒரு கையடக்க தொலைபேசியின் அழைப்பை மேற்கொண்டு கஞ்சிபானி இம்ரானை இணைத்ததாக அவர் கூறினார்.

அங்கு, கஞ்சிபானி இம்ரான், “வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு கொடுங்கள். அவர் பொலிஸ் நிலையத்திற்கு வரும் வழியில் நாங்கள் அவரை அடிப்போம்” என்று அறிவுறுத்தியிருந்தார்.

அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பின்னர், கொலை நடந்த 22 ஆம் திகதி, முறைப்பாட்டை விசாரிக்க வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு டேன் பிரியசாத்துக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அவர் அங்கு ஆஜராகாததால் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.

பின்னர், கஞ்சிபானி இம்ரான் மீண்டும் தனக்கு அழைப்பு விடுத்து “அவரை தாக்க ஒரு ஒருவர் போதாது. நீ வா. மாலையில் அவனை சந்திக்கலாம்” என்றார்.

சந்தேக நபர் அடுத்து என்ன நடந்தது என்பதை இன்னும் சரியாக விளக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சிபானி இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தமை மற்றும் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியதன் காரணமாக டேன் பிரியசாத் உடனான பகைமை காரணமாக, கொலை செய்வதற்கான துப்பாக்கிதாரிகளை கஞ்சிபானி இம்ரான் வழங்கியதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

டேன் பிரியசாத் தனது மனைவியின் வீட்டில் மது விருந்தை நடத்திக் கொண்டிருந்த போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வீட்டில் வசிக்கும் டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியான ஒரு பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

தன்னுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை டேன் பிரியசாத் விற்பனை செய்து கொடுத்ததற்காக வீட்டில் மது விருந்து வைத்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பு அங்கு வந்த டேன் பிரியசாத், குடும்பத்தினருடன் வருவதாக கூறிவிட்டு வௌியேறிச் சென்றதோடு, மீண்டும் இரவு வருகை தந்ததாக தெரிவித்துள்ளார்.

டேன் பிரியசாத்தின் சடலம் இன்று (24) பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.