எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் ஹிந்தி பொழியிலேயெ தனது உரையை நிகழ்த்தும் இந்திய பிரதமர் மோடி ஆங்கிலத்தில் ஆற்றிய உரை அவரது ஆத்திரத்தின் உச்சம் என்றும் சர்வதேச நாடுகளுக்கு விடுத்துள்ள செய்தி என்ற அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1960 ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்பது உட்பட 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.