நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் கூத்தின் போது இன்று அதிகாலை (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட மரக் கம்பத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தைச் சேர்ந்த எம்.சதாசிவம் (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (26) இரவு ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரை இடம்பெற இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் ஆண்டுதோறும் இந்த பொன்னர் சங்கர் கூத்து நடாத்தப்படுவதாகவும், இரவு முழுவதும் நடந்த நாடகத்தின் பின்னர் காலையில் பொது வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மரக் கம்பத்தல் பெரிய காந்தி எனும் கதாபாத்திரம் அதில் ஏறி சில நிமிடங்கள் தவம் செய்து பூஜை செய்ததன் பின்னர் அதிலிருந்து இறங்குவார். அதனைபோலவே குறித்த நபர் மரத்தில் ஏறியபோது மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்தமை நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.